போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கேரள எம்.எல்.ஏ., மீது வழக்கு
போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் கேரள எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : செப் 29, 2024 11:53 PM

கோட்டயம்,கேரளாவில் முதல்வர் அலுவலகம், சில மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பிய சுயேச்சை எம்.எல்.ஏ-, அன்வர் மீது, மூத்த அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டதாக கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு மலப்புரம் மாவட்ட நிலாம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் அன்வர். சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற இவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
இவர் சமீபத்தில், கேரள அமைச்சர்கள், முதல்வரின் அலுவலக செயலர், போலீஸ் உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தார்.
இதில், அமைச்சர்கள் சிலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் உள்ளிட்டோர் தங்க கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அன்வர் குற்றஞ்சாட்டினார்.
இதில், மலப்புர மாவட்ட எஸ்.பி., சுஜி தாசிற்கு தொடர்பிருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியது.
இது குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு, முதல்வர் பினராயி விஜயனை கவர்னர் ஆரிப் முகமது கான் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மூத்த அரசு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக கூறி எம்.எல்.ஏ., அன்வர் மீது கருக்காச்சல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
சமூக ஆர்வலர் தாமல் பீலியானிக்கல் அளித்த புகாரைத் தொடர்ந்து, பாரதீய நியாய சன்ஹிதா 192ம் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.