ADDED : நவ 06, 2024 03:01 AM

பெங்களூரு : கர்நாடகாவில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள சுரங்க ஊழல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அதிகாரியை மிரட்டியதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி மீது, அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
கடந்த 2006 முதல் 2008 வரை கர்நாடகாவின் முதல்வராகவும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவராகவும் குமாரசாமி இருந்தபோது, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசாய் வெங்கடேஸ்வரா மினரல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு, 550 ஏக்கர் நிலப்பரப்பிலான சுரங்கத்தை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து, குமாரசாமிக்கு எதிரான ஆதாரங்களையும் போலீசார் சேகரித்தனர். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் மூத்த போலீஸ் அதிகாரியும், லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி.,யுமான சந்திரசேகர் என்பவரை குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் ஆகியோர் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின்படி, மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.