ADDED : ஜன 30, 2025 11:41 PM
பெங்களூரு; அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக, ஆபாச வார்த்தை பயன்படுத்தியது தொடர்பாக, பா.ஜ., -- எம்.எல்.சி., ரவி மீது பதிவான வழக்குக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பரில், பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. மேல்சபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது. மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பா.ஜ., - எம்.எல்.சி., ரவி இடையே, வாக்குவாதம் நடந்தது.
அப்போது ரவி, லட்சுமி ஹெப்பால்கரை பற்றி ஆபாச வார்த்தை பயன்படுத்தி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். விதான் சவுதாவுக்குள் நுழைந்து ரவியை தாக்கி, மண்டையை உடைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இவரை, போலீஸ் வாகனத்தில் அமர்த்தி, இரவு முழுதும் சுற்றினர்.
'ஆள் நடமாட்டமில்லாத கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று, 'என்கவுன்டர் செய்ய முயற்சித்தனர். ஊடகத்தினர் கண்காணித்ததால், போலீசாரின் முயற்சி பலிக்கவில்லை' என, ரவி குற்றம்சாட்டினார். பா.ஜ.,வினரும் காங்கிரசாரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
லட்சுமி ஹெப்பால்கரை பற்றி, ஆபாச வார்த்தையை பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்த, சித்தராமையா அரசு, சி.ஐ.டி.,க்கு உத்தரவிட்டது. சி.ஐ.டி.,யும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. உமாஸ்ரீ உட்பட, காங்கிரசின் சில எம்.எல்.சி.,க்கள், ரவி ஆபாச வார்த்தையை பயன்படுத்தியதாக கூறினர்.
தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவி மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, ரவி மீதான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து, பிப்ரவரி 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

