பீஹாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிக்கு எதிராக வழக்கு
பீஹாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிக்கு எதிராக வழக்கு
ADDED : ஜூலை 06, 2025 01:02 AM

புதுடில்லி: பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.
எதிர்ப்பு
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுசாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
விசாரணை
அதில், 'தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை மீறுகிறது.
'மேலும் இந்த உத்தரவு தன்னிச்சையானது. பல லட்சம் வாக்காளர்களின் ஓட்டுரிமையை இது பறிக்கக் கூடும். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.