'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதாக 2 பா.ஜ., - எம்.எல்.ஏ.,மீது வழக்கு
'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பியதாக 2 பா.ஜ., - எம்.எல்.ஏ.,மீது வழக்கு
ADDED : பிப் 16, 2024 07:11 AM

மங்களூரு: மங்களூரு பாண்டேஸ்வர் பகுதியில், செயின்ட் ஜெரோசா என்ற பெயரில், கிறிஸ்துவப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர், அயோத்தி ராமர் கோவில், குங்குமம் குறித்து, ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் சர்ச்சைக்குரிய கருத்துகளை பரப்பி உள்ளார்.
மாணவர்களின் பெற்றோர், ஹிந்து அமைப்பினர் பள்ளியின் முன் போராட்டம் நடத்தினர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பள்ளியின் முன், ஜெய் ஸ்ரீராம் கோஷமும் எழுப்பப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
அதன்பின்னர் ஆசிரியை மீது ஹிந்து அமைப்பினர், போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், பள்ளியின் முன் 'ஜெய் ஸ்ரீராம் கோஷம்' எழுப்பி, மத உணர்வுகளை துாண்டுவதாக, மங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வேதவியாஸ் காமத், மங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி, ஹிந்து அமைப்பு தலைவர் ஷரன் பம்ப்வெல் உட்பட, ஐந்து பேர் மீது அனில் ஜெரால்டு லோபோ என்பவர் அளித்த புகாரில், பாண்டேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
“பள்ளியின் முன் நடந்த போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவே இல்லை. என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு, பெங்களூரு வந்துவிட்டேன்.
“வேதவியாஸ் காமத், அந்த பள்ளிக்கு செல்வதற்கு முன்பே, அங்கு ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது. அவர் மீதும் பொய் வழக்குப்பதிவாகி உள்ளது. எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அரசு மிரட்ட பார்க்கிறது. இதற்கு பயப்பட மாட்டோம்,” என, அவர் தெரிவித்தார்.