ADDED : ஜன 12, 2025 11:58 PM
கொச்சி: கேரளாவின், அங்கமாலி பேராயர் இல்லத்தில் போராட்டம் நடத்திய 20 பாதிரியார்கள் போலீசாரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின், எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலியில் சைரோ மலபார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் உட்பட 23 தேவாலயங்கள், ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் உள்ள போப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
இந்த தேவாலயங்களின் வழிபாட்டு முறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு, சில பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சீர்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 21 பாதிரியார்கள் அங்கமாலி பேராயர் இல்லத்தின் முன் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அப்போது, பேராயர் இல்லத்தில் அவர்கள் நுழைய முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், எஸ்.ஐ., அனுாப் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசாரை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.