வெளிநாட்டு நன்கொடை முறைகேடு ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீது வழக்கு
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : ஏப் 17, 2025 09:41 PM
புதுடில்லி:வெளிநாட்டு நன்கொடைகளை முறைகேடாக திரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் ஆம் ஆத்மியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், குஜராத் மாநில தேர்தல் பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் மற்றும் அக்கட்சி நிர்வாகி கபில் பரத்வாஜ் ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது.
கடந்த 2016ல், 'ஆம் ஆத்மி ஓவர்சிஸ் இந்தியா' என்ற அமைப்பை ஆம் ஆத்மி உருவாக்கி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள தன்னார்வலர்கள் வாயிலாக வெளிநாட்டு நன்கொடைகளை பெற்றது.
இதில், ஒரே பாஸ்போர்ட் எண்ணில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை, துர்கேஷ் பதக் மற்றும் கபில் பரத்வாஜ் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக அனுப்பப்பட்டதை மத்திய அரசு கண்டறிந்தது.
இது, எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறும் செயல் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த புகாரின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், நன்கொடை அளித்த நபர்களின் விபரங்களும் போலியானது என தெரியவந்தது. இதன் வாயிலாக, வெளிநாட்டு நன்கொடைகளை முறைகேடாக ஆம் ஆத்மி பெற்றதை அமலாக்கத்துறை உறுதி செய்தது.
அமலாக்கத்துறையின் விசாரணையின்படி, சி.பி.ஐ., தரப்பில் ஆம் ஆத்மியின் துர்கேஷ் பதக் மற்றும் கபில் பரத்வாஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டில்லியில் உள்ள அவர்களின் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நீண்டநேரம் நீடித்த இச்சோதனையில், வெளிநாட்டு நன்கொடை விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர்.

