ADDED : நவ 29, 2024 12:35 AM
ஆலப்புழா,
தாயின் கருப்பையில் இருக்கும் கருவுக்கு மரபு குறைபாடுகள் இருப்பது குறித்து தெரிவிக்காத நான்கு டாக்டர்கள் மீது, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த அனீஷ் - சுருமி, 35, தம்பதிக்கு சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு உள்ளேயும், வெளியேயும் பல மரபு குறைபாடுகள் இருந்தன. குழந்தையின் உடல் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில், ஆலப்புழாவில் உள்ள கடப்புரம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு பெண் டாக்டர்கள் மற்றும் தனியார் பரிசோதனை மையத்தின் இரண்டு டாக்டர்கள் என, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரசவ காலத்தின்போது, சுருமி, கடப்புரம் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆலப்புழாவில் உள்ள தனியார் பரிசோதனை மையத்தில் பரிசோதனைகளை செய்து கொண்டார்.
கடந்த அக்., 30ல் பிரசவ வலி ஏற்பட்டு, கடப்புரம் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், குழந்தையின் வளர்ச்சி சரியாக இல்லை என, ஆலப்புழாவின் வந்தனத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம்.
கடந்த நவ., 8ல் அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்தது. குழந்தை பல குறைபாடுகளுடன் பிறந்ததால், நான்கு நாள் கழித்தே பெற்றோருக்கு காட்டினர்.
பிரசவ காலத்தின்போது அரசு டாக்டர்களோ, தனியார் பரிசோதனை மையத்தைச் சேர்ந்த டாக்டர்களோ, கருவுக்கு மரபு குறைபாடு உள்ளதை தெரிவிக்கவில்லை. பெரும் குறைபாடுகளுடன் குழந்தை பிறந்துள்ளது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

