கேரளாவில் காங்., நிர்வாகி தற்கொலை எம்.எல்.ஏ., உட்பட நால்வர் மீது வழக்கு
கேரளாவில் காங்., நிர்வாகி தற்கொலை எம்.எல்.ஏ., உட்பட நால்வர் மீது வழக்கு
ADDED : ஜன 10, 2025 02:15 AM
வயநாடு, கேரள காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை செய்த விவகாரத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் உட்பட நான்கு பேர் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
கடிதம்
இங்குள்ள வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக இருந்தவர், என்.எம்.விஜயன், 78. இங்குள்ள கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, கடந்த 27ம் தேதி விஜயன் தற்கொலை செய்து கொண்டார். இவர் மகன் ஜிதேஷும் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இருவர் தற்கொலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகளே காரணம் என விஜயன் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அது மட்டுமின்றி, தற்கொலைக்கு முன் விஜயன் எழுதிய கடிதமும் போலீசாரிடம் சிக்கியது.
நடவடிக்கை
அதில், 'வேலை வாங்கி தருவதாகக் கூறி, இளைஞர்களிடம் பணத்தை பெற்று காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கொடுத்தேன். ஆனால், சொன்னபடி வேலையும் பெற்றுத் தரவில்லை; பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை' என குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சுல்தான் பதேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் என்.டி.அப்பச்சன், மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் பி.வி.பாலச்சந்திரன், காங்., நிர்வாகி கே.கே.கோபிநாதன் ஆகியோர் மீது மோசடி, ஏமாற்றுதல், தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜயனின் கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர்.