ஹிந்து நினைவிடத்தில் தொழுகை; மூன்று பெண்கள் மீது வழக்கு
ஹிந்து நினைவிடத்தில் தொழுகை; மூன்று பெண்கள் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 05:29 AM

புனே: மஹாராஷ்டிராவின் புனேயில், ஹிந்துக்களுடன் தொடர்புடைய ஷனிவர்வாடா பகுதியில் தொழுகை நடத்திய மூன்று முஸ்லிம் பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள புனே நகரில், ஷனிவர்வாடா என்ற பழமையான நினைவுச் சின்னம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தை பார்வையிட, கடந்த 18ம் தேதி சென்ற மூன்று முஸ்லிம் பெண்கள் அங்கு திடீரென தொழுகையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது பற்றி அறிந்த பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், ஷனிவர்வாடாவில் தொழுகை நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பழமையான நினைவிடம் மற்றும் தொல்லியல் துறை இடத்தில் விதியை மீறி தொழுகையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., மேத்தா குல்கர்னி தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் ஷனிவர்வாடாவுக்கு சென்று கோமியம் மற்றும் மாட்டு சாணத்தை தெளித்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர்.
இது, மக்களிடையே மத ரீதியில் மோதலை ஏற்படுத்தும் முயற்சி என, ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவார் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மாநில அமைச்சர் நிதேஷ் ரானே, “ஷனிவர்வாடா, ஹிந்துக்கள் மற்றும் சத்ரபதி சிவாஜிக்கு நெருக்கமான இடம் என்பது மட்டுமின்றி வீரத்தின் சின்னமாகவும் உள்ளது. இங்கு தொழுகை நடத்தியது போல் ஹாஜி அலியில் அனுமன் சாலிசாவை பாட முஸ்லிம்கள் அனுமதிப்பரா,” என, கேள்வி எழுப்பினார்.