50 லஞ்ச அதிகாரிகள் மீது வழக்கு அனுமதிக்காக காத்திருக்கிறது சி.வி.ஜி.,
50 லஞ்ச அதிகாரிகள் மீது வழக்கு அனுமதிக்காக காத்திருக்கிறது சி.வி.ஜி.,
ADDED : ஆக 09, 2011 02:13 AM
புதுடில்லி : லஞ்சம் பெற்ற ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 44 பேர் மீது வழக்கு தொடர, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை, சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
அரசு துறைகளில் உயர் பதவி வகிப்பவர்கள் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதால், மத்திய ஊழல் கண்காணிப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். ஊழல் பெற்றது தொடர்பாக 131 அதிகாரிகள் மீது, கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கம் மற்றும் கலால் வரித்துறை வாரியத்தில் 25 பேர் மீதும், மத்திய வர்த்தகத் துறையில் 16 பேர் மீதும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் 12 பேர் மீதும், ரயில்வே துறையில் 10 பேர் மீதும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களிடமிருந்து 16 கோடி ரூபாய் மதிப்புள்ள லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற வேண்டும். இந்த வகையில், 44 அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறையினர் காத்திருக்கின்றனர். இவர்களில் ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் அடங்குவர். நகர்ப்புற வளர்ச்சித் துறையில் உள்ள ஆறு பேர் மீதும், நிதித் துறையைச் சேர்ந்த ஐந்து பேர் மீதும், தொலைபேசித் துறை மற்றும் மத்திய நிர்வாகத் துறையைச் சேர்ந்த தலா நான்கு பேர் மீதும், யுனைடெட் இந்தியா இன்சூரன்சைச் சேர்ந்த மூன்று பேர் மீதும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, யூகோ வங்கி, நிலக்கரித் துறை, பாரத் பெட்ரோலியம் ஆகிய துறைகளில் பணியாற்றும் தலா இருவர் மீதும் வழக்கு தொடர, அந்த துறையின் ஒப்புதல் வேண்டி ஊழல் கண்காணிப்புத் துறையினர் காத்திருக்கின்றனர்.

