48 மணிநேரத்திற்குள் ஓட்டு சதவீதத்தை அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
48 மணிநேரத்திற்குள் ஓட்டு சதவீதத்தை அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
ADDED : மே 24, 2024 12:18 PM

புதுடில்லி: ஓட்டு சதவீதத்தை 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடக்கோரிய வழக்கில், 'தவறான குற்றச்சாட்டுகளால் ஓட்டுப்பதிவு பாதிக்கும். தேர்தல் நடக்கும் தற்போதைய சூழலில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை' எனக் கூறி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்தியாவில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 6வது கட்ட தேர்தல் நாளை (மே 25) நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ ஓட்டு சதவீதத்தை அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் ஆணையம் வாதம்
இந்த வழக்கு இன்று (மே 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ''சந்தேகத்தின் அடிப்படையிலும் அவநம்பிக்கை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் எழுப்பி மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்தால் ஓட்டளிக்க வருவதை குறைக்கும். தேர்தல் நடைபெறும் காலத்தில் இதுபோன்ற மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்க கூடாது'' என தேர்தல் ஆணையம் வாதிட்டது.
விசாரிக்க விரும்பவில்லை
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் ஓட்டளிக்க வருவதை குறைத்துவிடும். ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் ஓட்டுப்பதிவை பாதிக்கும். தேர்தல் நடைபெறும் தற்போதைய சூழலில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை. இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை'' எனக் கூறி விடுமுறைக்கு பின் வழக்க பட்டியலிட உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.