கோவில்களை நிர்வாகங்களிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவு
கோவில்களை நிர்வாகங்களிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவு
ADDED : ஏப் 02, 2025 06:29 AM

புதுடில்லி : ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை, கோவில் நிர்வாகங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடும்படி கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களை நாடும்படி அறிவுறுத்தல் வழங்கி, வழக்கை முடித்து வைத்தது.
தமிழகம், புதுவை, ஆந்திரா மாநிலங்களில், ஹிந்து அறநிலையத்துறை வசமுள்ள கோவில்களை, அந்தந்த கோவில் நிர்வாகங்களிடமே ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, தயானந்த சரஸ்வதி, பரமானந்த சரஸ்வதி, விஸ்வேஷ்வரானந்த், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த மனுக்கள் நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஏற்கனவே வேறு சில மாநிலங்களில், இதே போன்று கோவில் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களை அந்தந்த கோவில் நிர்வாகங்களிடமே ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரம் மூன்றுக்கும் அதிகமான மாநிலங்கள் சார்ந்தது என்பதால், உயர் நீதிமன்றங்களில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்ய முடியாது. அதனால் தான், உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளோம். எனவே, தங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, வாதிட்டனர்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சட்ட விவகாரங்களை மட்டும் கருத்தில் எடுக்க முடியாது. சூழல்கள் சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அணுக வேண்டியுள்ளது. எனவே, இது சம்பந்தமாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்பது மிகவும் முக்கியமானது. மாநிலங்கள் தரப்பு வாதங்கள் இல்லாமல், எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது.
அதனால், இந்த பிரச்னை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகினால் தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களை மனுதாரர்கள் முதலில் நாட வேண்டும். மனுக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.