சித்ரதுர்கா பகுதியில் முந்திரி விளைச்சல் வேளாண்மை மைய அதிகாரி அழைப்பு
சித்ரதுர்கா பகுதியில் முந்திரி விளைச்சல் வேளாண்மை மைய அதிகாரி அழைப்பு
ADDED : நவ 24, 2024 11:02 PM
சித்ரதுர்கா: வறண்ட நிலப்பகுதியில் அதிக நீர் தேவைப்படாத சூழலில் விளைகின்ற பணப்பயிரான முந்திரி, தற்போது சித்ரதுர்கா மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப் படுகின்றது.
ஷிவமொக்கா வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பல்கலையின் முந்திரி தொழில் நுட்ப மைய ஒருங்கிணைப்பாளர் ஆலோசகர் சுனில் கூறியதாவது:
கர்நாடகாவின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப, முந்திரி நாற்றுகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஷிவமொக்காவில் உள்ள கேலடி சிவப்ப நாயக்க வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், மத்திய அரசின் கோகோ முந்திரி மேலாண்மைக் கழகமும் இணைந்து முந்திரி நாற்றுகளை 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடுவதற்காக, 1,000 நாற்றுகளை 50 பேருக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
சித்ரதுர்கா செல்லகெரே தாலுகாவில் மட்டும் 7,0-80 விவசாயிகள், முந்திரி நாற்றுகளை 247 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டுஉள்ளனர்.
கடந்த 2001ல் ஒரு கிலோ முந்திரி விதை, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று 140 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முந்திரி பயிர்கள் டிசம்பரில் பூக்கும்; ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். முந்திரி நாற்றுகள் நன்கு வளர, 15 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அப்போது தான் மும்மடங்கு பயன் தரும்; விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹிரியூரில் உள்ள பட்டூர் வேளாண்மை அறிவியல் நிலைய இணை ஆய்வாளர் சரணப்பா சங்கண்டி கூறியதாவது:
ஹிரியூரில் உள்ள பட்டூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரியின் 'கெரு' என்ற ரகத்தின் மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் 300 முந்திரி நாற்றுகள் நடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் தரமான நாற்றுகள் விற்பனைக்கு வரும். தேவைப்படும் விவசாயிகள், ஜனவரியிலிருந்து ஷிவமொக்கா பவிகெரே விவசாயப் பண்ணையில் வாங்கி பயிரிடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.