sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் தவிர்க்க முடியாத ஜாதிவாரி அரசியல்

/

கர்நாடகாவில் தவிர்க்க முடியாத ஜாதிவாரி அரசியல்

கர்நாடகாவில் தவிர்க்க முடியாத ஜாதிவாரி அரசியல்

கர்நாடகாவில் தவிர்க்க முடியாத ஜாதிவாரி அரசியல்


ADDED : ஜூன் 23, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை பொறுத்தவரை, ஜாதி அரசியல் தவிர்க்க முடியாதது. இங்கு நடக்கும் தேர்தல்களில், ஜாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

கர்நாடகாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை காங்., கைப்பற்றியது. முதல்வர் விவகாரத்தில் சித்தராமையா - சிவகுமார் இடையே பனிப்போர் நிலவியது.

சோனியா, ராகுல், பிரியங்கா சமாதானப்படுத்தியதை அடுத்து, முதல்வர் பதவியை சிவகுமார் விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார்; சிவகுமார் துணை முதல்வர் ஆனார்.

கர்நாடகாவில், 2014ல் முதல்வராக இருந்த சித்தராமையா, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எச்.காந்தராஜ் தலைமையில் கமிஷன் அமைத்தார்.

அங்கீகரிக்கவில்லை


இதன்பின், கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே கமிஷனுக்கு தலைமை தாங்கி, அறிக்கையை இறுதி செய்தார். எனினும், இந்த அறிக்கையை கமிஷனில் இருந்தவர்களே அங்கீகரிக்கவில்லை.

கடந்த 2018ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதல்வர் ஆனார். அவரிடம், கே.ஜெயபிரகாஷ் ஹெக்டே கமிஷனின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கவில்லை. 2021ல் முதல்வரான பா.ஜ., மூத்த தலைவர் பசவராஜ் பொம்மையும், எந்த காரணமும் கூறாமல் இந்த அறிக்கையை ஏற்க மறுத்தார்.

கடந்த 2024 மார்ச்சில், முதல்வர் சித்தராமையாவிடம் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கட்சியின் டில்லி மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின்படி, 162 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட அந்த கணக்கெடுப்பை, அவர் குப்பையில் போட்டார். தரவுகள் எல்லாம் பழையது என்பதே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

ஊடகங்களுக்கு கசிந்த இந்த அறிக்கையில், கர்நாடகாவில் எஸ்.சி., மக்கள் தொகை 18 சதவீதம்; முஸ்லிம்கள் 13; லிங்காயத்துக்கள் 11; வொக்கலிகர்கள் 10 சதவீதமாக இருந்தது தெரியவந்தது. மாநில அரசின் முந்தைய இரண்டு கமிஷன்களின் அறிக்கைகளில், முஸ்லிம்கள் இரண்டாவது இடத்தை பிடிக்கவில்லை.

ஆனால், சித்தராமையா அமைத்த கமிஷன் தயார் செய்த அறிக்கையில், முஸ்லிம்கள் இரண்டாம் இடம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அவர் நிராகரித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

வழக்கமாக, மாநிலத்தில் வலுவாக உள்ள சமூகங்கள், அறிக்கையில் குறைத்து காட்டப்படுவதை விரும்புவதில்லை.

எதிர்பார்ப்பு


வொக்கலிகர் இனத்தைச் சேர்ந்தவரும், கர்நாடக காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாரும், இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஏற்கவில்லை. முஸ்லிம்களுக்கு அடுத்து வொக்கலிகர்கள் இருப்பதாக வெளியான தரவுகளே அதற்கு காரணம்.

இதை எல்லாம் கருதியே ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை காங்., அரசு குப்பையில் போட்டு விட்டது. தற்போது புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த புதிய கணக்கெடுப்பு அறிக்கை அரசியல் ரீதியாக வலிமையான லிங்காயத்துகள் அல்லது வொக்கலிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்பது தெரியவில்லை.

இந்த தரவுகள், சமூகம் சார்ந்த நலத்திட்டங்களை வடிவமைப்பதற்காக மட்டுமே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

பல்வேறு சமூகங்களை திருப்திப்படுத்தவும், அரசியல் கட்சிகளை வலுப்படுத்தவும் இந்த தரவுகள் உதவுகின்றன.

சிறுபான்மையினரிடையே தன் ஆதரவை வலுப்படுத்த முதல்வர் சித்தராமையா முயற்சிகளை தொடரலாம் என்றாலும், வொக்கலிகர்கள் மத்தியில் தன் புகழை குறைக்க துணை முதல்வர் சிவகுமார் விரும்ப மாட்டார்.

மேலும், கல்வியாண்டு துவங்கி விட்டதால், ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை ஈடுபடுத்துவதும் சிக்கலாக இருக்கும்.

இதனால், புதிய கணக்கெடுப்பு பணி எப்போது துவங்கி, எப்போது முடிவடையும் என்பது குறித்த தகவல் இல்லை. பெயரளவுக்கே கணக்கெடுப்பு இருக்கும் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

மக்கள் தொகை


இதற்கிடையே, 2027 மார்ச் 1க்குள் நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்தி முடிக்க, மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது. அப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடக்க உள்ளது.

இந்த சூழலில், மாநில அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது, ஓட்டு அரசியல் மற்றும் ஜாதிவாரி அரசியல் மட்டுமே காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது

- நமது சிறப்பு நிருபர் - .






      Dinamalar
      Follow us