அனைத்து பகுதிகளிலும் செல்வாக்கு; எங்கு போட்டியிட்டாலும் வெல்வோம்: மா.கம்யூ., அபார நம்பிக்கை
அனைத்து பகுதிகளிலும் செல்வாக்கு; எங்கு போட்டியிட்டாலும் வெல்வோம்: மா.கம்யூ., அபார நம்பிக்கை
UPDATED : டிச 26, 2025 03:02 AM
ADDED : டிச 26, 2025 03:01 AM

சென்னை: “தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் மா.கம்யூ., கட்சி வெற்றி பெறும்,” என அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று, அவர் அளித்த பேட்டி: தஞ்சை மாவட்டத்தில் ஜாதி பாகுபாடு, தீண்டாமை கொடுமை மிக குறைவாக இருப்பதற்கு காரணம், கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம் தான்.
கடந்த 2005ல், கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தியதால், 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை தரும் இத்திட்டத்தை, பா.ஜ., அரசு சிதைத்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். 27 லட்சம் வாக்காளர்கள் கடந்த ஓராண்டில் இறந்து விட்டதாக தேர்தல் கமிஷன் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை, உரிய காலத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும்.
கேரள கம்யூனிஸ்ட் அரசு அறிவித்துள்ளதைப் போல, 'மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்' என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தி.மு.க., உடனான தொகுதிப் பங்கீடு பேச்சின்போது, கூடுதல் தொகுதிகள் பெறும் முயற்சிகளை மேற்கொள்வோம்.
அனைத்து பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

