ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்
ADDED : ஏப் 12, 2025 02:38 AM

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் சில அமைச்சர்களின் எதிர்ப்புக்கு இடையே, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை, அமைச்சரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2013ல் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு இருந்த போது மக்கள் தொகை, அவர்களின் பொருளாதாரம், கல்வி சூழ்நிலையை தெரிந்து கொள்ள முடிவு செய்தது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் மூலமாக ஆய்வு நடத்தியது. ஆணையமும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்திருந்தது. இதை 2018ல் அரசிடம் தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே அறிக்கையின் தகவல்கள் பகிரங்கமானது. இதில் பெரும்பான்மை சமுதாயத்தினர் மக்கள் தொகையை குறைவாகவும், சிறுபான்மையினர் சமுதாயத்தினர் மக்கள் தொகையை அதிகமாக காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆணையம் ஆய்வு செய்து தயாரித்த அறிக்கை அல்ல. அரசின் உத்தரவுபடி தயாரிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என, பிடிவாதம் பிடித்தனர். இதற்கிடையே அரசு மாறியது. கூட்டணி அரசு அதன்பின் பா.ஜ., அரசு வந்தது. 2023ல் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின், ஜாதி வாரி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சியின் சில அமைச்சர்களே, இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
அனைவரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ஜாதி வாரி அறிக்கையின் சீல் திறந்து, தாக்கல் செய்தார். அத்துறை செயலர் சஞ்சய் ஷெட்டண்ணனவர், அறிக்கையின் சாராம்சங்களை விவரித்தார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வறிக்கையை ஆய்வு செய்ய, அமைச்சரவை துணை கமிட்டி அமைக்கும்படி, சில அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். அப்போது முதல்வர் சித்தராமையா, 'அனைத்து அமைச்சர்களுக்கும், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை அளிக்கிறேன். அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது, அறிக்கையை விரிவாக ஆய்வு செய்து கொண்டு வாருங்கள். இம்மாதம் 17ம் தேதியன்று சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், அறிக்கையை என்ன செய்வது என, முடிவு செய்யலாம்' என கூறியுள்ளார்.
அமைச்சர் சிவராஜ் தங்கடகி அளித்த பேட்டி:
அமைச்சர்களின் ஆலோசனையை, முதல்வர் ஏற்று கொண்டார். ஜாதி கணக்கெடுப்புக்கு 165 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 1.35 கோடி குடும்பங்களின், 5.98 கோடி மக்களிடம் ஆய்வு நடந்துள்ளது. அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சில அமைச்சர்கள் அறிக்கையை ஆமோதித்துள்ளனர்.
அறிக்கை குறித்து, இம்மாதம் 17ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, முடிவு செய்வோம். அன்று அறிக்கையை அங்கீகரித்து, அமைச்சரவை துணை கமிட்டி அமைக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.