ADDED : அக் 09, 2024 10:56 PM

துமகூரு : ''ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்த கூடாது,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து, துமகூரின் குப்பி எம்.எல்.ஏ., சீனிவாஸ், நேற்று அளித்த பேட்டி:
ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து, முதலில் விரிவாக ஆலோசிக்க வேண்டும்.
அதன்பின் அமைச்சரவையில் தாக்கல் செய்யட்டும். மேம்போக்காக பார்க்கும் போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை விவேகமற்றதாகும்.
அனைத்து சமுதாயத்துக்கும், சமூக, கல்வி ரீதியில் நியாயம் கிடைக்க வேண்டும். அது போன்று அறிக்கை தயாரித்து வெளியிடட்டும். அறிக்கை வெளியிட கூடாது என, இதற்கு முன்பே நான் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன்.
ஒக்கலிகர், லிங்காயத் என, பல்வேறு ஜாதிகளில் உட் பிரிவுகள் உள்ளன. இவற்றை சரியாக குறிப்பிட்டு, அறிக்கை தயாரிக்க வேண்டும்.
தற்போதைய அறிக்கையில் இது போன்று குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்த அறிக்கையை வெளியிட, நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

