'மொபைல் போன்' செயலி வாயிலாக 'டிஜிட்டல்' முறையில் 'சென்சஸ்'
'மொபைல் போன்' செயலி வாயிலாக 'டிஜிட்டல்' முறையில் 'சென்சஸ்'
ADDED : ஜூலை 08, 2025 12:27 AM

புதுடில்லி: நாட்டிலேயே முதன்முறையாக, 'மொபைல் போன்' செயலி வாயிலாக, 'டிஜிட்டல்' முறையில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
பனிப்பொழிவால் பாதிக்கப்படும் ஜம்மு - காஷ்மீர், லடாக், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய இடங்களில் அடுத்தாண்டு அக்., 1ம் தேதியும், மீதமுள்ள பகுதிகளில், 2027, மார்ச் 1ம் தேதியும், 'சென்சஸ்' எனப்படும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக மொபைல் போன் செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நவீனமயமாக்கவே அதை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக தரவுகளைச் சேகரித்து, மின்னணு முறையில் மத்திய சேவையகத்திற்கு அனுப்பும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இதன் விளைவாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு விரைவில் கிடைக்கும்.
கணக்கெடுப்பாளர்கள், தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் உள்ள பிரத்யேக செயலியை பயன்படுத்தி, குடிமக்களின் தரவுகளை சேகரிப்பர்.
இணையதளம்
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சுய கணக்கெடுப்புக்காக ஒரு சிறப்பு பிரத்யேக இணையதளம் துவங்கப்படும்.
இது தேசிய கணக்கெடுப்பு நடவடிக்கையின் இரு கட்டங்களுக்கும் கிடைக்கும். நம் நாட்டில், இணையதளம் வாயிலாக, மக்கள் சுய கணக்கெடுப்பில் பங்கேற்பது, இது முதன்முறை.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின், முதல் கட்ட பணி அடுத்தாண்டு ஏப்., 1 முதல் துவங்கும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த மிகப்பெரிய தேசிய அளவிலான பயிற்சிக்காக 1.3 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உட்பட 34 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என கூறப்பட்டுள்ளது.