சந்தேக ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை ஒரே நாளில் 2,208ல் இருந்து 480 ஆக சரிவு
சந்தேக ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை ஒரே நாளில் 2,208ல் இருந்து 480 ஆக சரிவு
ADDED : டிச 04, 2025 04:59 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 2,208 ஓட்டுச்சாவடிகளில் கடந்த, 20 ஆண்டுகளில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் யாருமில்லை என பதிவாகியிருந்த நிலையில், அது குறித்து மாநில தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டதால், தற்போது அந்த ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 480 ஆக குறைந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 294 சட்டசபை தொகுதிகளில் மொத்தம், 78,000க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் படிவம் வழங்கப்பட்டுள்ளன. அதில், 96 சதவீத படிவங்கள் நிரப்பப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தெற்கு 24 பர்கானாஸ், புருலியா, முர்ஷிதாபாத், ஹவுரா ஆகிய மாவட்டங்களில் மொத்தம், 2,208 ஓட்டுச் சாவடிகளில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், முகவரி மாறியவர்கள், நகல் வாக்காளர்கள் என ஒருவர் கூட இல்லாமல், அனைத்து படிவங்களும் திரும்ப வந்ததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் திருத்தப்பட்ட தரவுகளுடன் கூடிய அறிக்கையை நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர். அதில், இத்தகைய ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 2,208ல் இருந்து, 480 ஆக குறைந்துள்ளது.
தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்ட ஒரே நாளில், இந்த அளவு எண்ணிக்கை குறைந்ததும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தொடர்ச்சியான தரவு மேம்படுத்தல் மூலம் திருத்தம் இல்லாத ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்றனர்.

