23 மாநிலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மும்முரம்; முதல்கட்ட பணிகள் நிறைவு
23 மாநிலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மும்முரம்; முதல்கட்ட பணிகள் நிறைவு
ADDED : ஜூன் 16, 2026 07:48 PM

புதுடில்லி: 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பானது 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல், கட்டடங்கள், வீடுகளின் விவரப்பட்டியலை தயாரிப்பது, வீட்டு வசதிகள், சொத்துகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் வகையில் பணிகள் தொடங்கின. முதல்முறையாக இப்பணிகள் டிஜிட்டல் முறையில் தொடங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை;
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணிகள் மே 16ம் தேதி முதல் ஜூன் 14 வரை நடைபெற்றது. கேரளா மற்றும் நாகாலாந்தில் 15 நாள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
ஜூலை 1 முதல் ஜூவை 30 வரை களப்பணி தொடர்ந்து நடைபெறும். இந்த பணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே தொடங்கி உள்ளன. குஜராத், ஜம்மு காஷ்மீர் லடாக், புதுச்சேரி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
கணக்கெடுப்பின் முதல் கட்டத்தின் போது குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு அடையாள எண்ணை வீட்டு இருப்பிட அறிவிப்பு பணிகளை மேற்கொள்ளும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2ம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பானது, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும். இந்தியாவில் கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
