பிரம்மோஸ் ஏவுகணை திட்ட தலைவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி
பிரம்மோஸ் ஏவுகணை திட்ட தலைவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி
ADDED : ஜன 01, 2026 12:43 AM
ஹைதராபாத்: பிரம்மோஸ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு, டாக்டர் ஜெயதீர்த்த ஜோஷியை நியமித்த உத்தரவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டின் ராணுவத்திற்கு பிரம்மோஸ் ஏவுகணை பெரும் பலம் சேர்த்து வருகிறது. இந்திய - ரஷ்ய கூட்டுறவில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 'பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெனரலாக டாக்டர் ஜெய்தீர்த்த ஜோஷி, 2024 டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து மூத்த விஞ்ஞானியான டாக்டர் சிவசுப்ரமணியம் நம்பி நாயுடு என்பவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டிருந்தார். அதில், தகுதிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தும் தன்னை புறக்கணித்து ஜோஷியை நியமித்தது தவறு எனவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 29ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாய உறுப்பினர்கள் டாக்டர் லதா பஸ்வராஜ் பட்னே மற்றும் வருண் சிந்து குல் கவுமுடி ஆகியோர், நம்பி நாயுடுவின் வாதங்களை ஏற்றுக்கொண்டு, ஜெயதீர்த்த ஜோஷியின் நியமன உத்தரவை ரத்து செய்தனர்.
'அனுபவம், தகுதி ஆகியவற்றை கருத்தில் கொ ள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நியமனம் செல்லாது. அடுத்த 4 வாரங்களுக்குள் தேர்வு செயல்முறையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தலைவரை நியமிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், தீர்ப்பாயம் அதை ஏற்க மறுத்துவிட்டது.

