ADDED : ஜன 01, 2026 12:44 AM

புவனேஸ்வர்: ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி, புராண காலத்து மன்னரான கம்சனின் அரசவையில் ஆஜராகி, பர்கார் மாவட்டத்திற்காக தன் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார்.
ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பர்கார் மாவட்டத்தில், 'தனு யாத்திரை' என்ற பெயரில், 11 நாட்கள் திறந்தவெளியில் நாடகம் நடக்கும். உலகப் புகழ் பெற்ற இந்த திருவிழா, பகவான் கிருஷ்ணரால், கம்ச மன்னன் வதம் செய்யப்படும் கதையை மையமாகக் கொண்டது.
இந்நிலையில், தனு யாத்திரையின் ஏழாவது நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் சரண் மஜி நேற்று பங்கேற்றார். யானை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்த அவர், கம்ச மன்னனின் அரசவையில் ஆஜராகி, பர்கார் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
பர்கார் மாவட்டத்தில், 1,362 கோடி ரூபாய் மதிப்பில், 123 நலத்திட்டங்கள் துவக்கப்பட்டு உள்ளதாகவும், 380 கோடி ரூபாய் மதிப்பில், மேலும் நான்கு புதிய திட்டங்களும் துவக்கப்படுவதாகவும் முதல்வர் மோகன் சரண் மஜி தெரிவித்தார்.
மேலும், 2024 - -25 காரிப் மற்றும் ராபி பருவங்களில், 2,41,135 விவசாயிகளிடமிருந்து, 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்காக விவசாயிகளுக்கு, 4,338 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த கம்ச மன்னன் வேடத்தில் இருந்தவர், அவரது பணிகளை பாராட்டினார்.
முதல்வர் மோகன் சரண் மஜி கூறுகையில், ''தனு யாத்திரை என்பது நம் நாட்டின் கலாசார பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரி. இந்த விழாவிற்கான மாநில அரசின் மானியம், 1 கோடியில் இருந்து 1.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த விழாவிற்கு, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.

