ஆந்திராவில் நீர் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
ஆந்திராவில் நீர் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
UPDATED : டிச 12, 2025 12:43 AM
ADDED : டிச 12, 2025 12:30 AM

அமராவதி: ஆந்திராவில், நீரில் தரையிறங்கும் விமானங்களை இயக்குவதற்காக, ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்த, நீர் விமானங்கள் இயக்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து வந்தது. இந்த விமானங்கள் நீரிலிருந்து புறப்பட்டு நீரில் தரையிறங்கும் திறன் உடையவை. இதற்காக மிகப்பெரிய ஆறுகள், ஏரிகளில் நீர் விமான நிலையங்கள் கட்டப்படும்.
ஆந்திராவில் நீர் விமான சேவையை அறிமுகப்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டே துவங்கின. விஜயவாடா மாவட்டம் பிரகாசம் அணையில் இருந்து நாண்டியால் மாவட்டம் ஸ்ரீசைலம் வரை, மாதிரி நீர் விமானத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அப்போது துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு ஆந்திர பிரதேச விமான நிலையங்கள் மேம்பாட்டு நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், ஆந்திராவில் விசாகப்பட்டினம், அல்லுாரி சீதாராம ராஜு மாவட்டத்தின் லம்பசிங்கி மற்றும் ஜலபுட் அணை , நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம், காக்கிநாடா, விஜயவாடா மாவட்டத்தின் பிரகாசம் அணை, ஒய்.எஸ்.ஆர்., கடப்பா மாவட்டத்தின் காந்திகோட்டா ஆகிய ஏழு இடங்களில் நீர் விமான நிலையங்கள் அமைப்பதற்கு, செயல்பாட்டு விதிகளை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு நேற்று அனுமதி கிடைத்துள்ளது.
இது முதற்கட்ட அனுமதி. இதன்பின் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதன் முடிவுகளை வைத்து சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

