CISF-ல் பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி
CISF-ல் பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : நவ 13, 2024 06:57 AM

புதுடில்லி: மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1,000 பெண்களை உள்ளடக்கிய அனைத்து பெண்கள் படைப்பிரிவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
விமான நிலையங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் செயல்படும் இந்த அமைப்பு 1969ல் உருவாக்கப்பட்டது.
12 சிறப்பு படைப்பிரிவுகளை கொண்டதாக செயல்படுகிறது. இந்த ஆண்டு முதல் பார்லிமென்ட் வளாகத்திலும் இந்த படை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் 68 விமான நிலையங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்த படையில், பெருமளவிலான பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அடங்கிய சிறப்பு படைப்பிரிவை சி.ஐ.எஸ்.எப்.,பில் உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவு, 1,025 பெண் போலீசாரை கொண்டதாக உருவாக்கப்படும்.