வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
ADDED : மே 18, 2025 11:48 PM

புதுடில்லி: ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உட்பட குறிப்பிட்ட சில பொருட்களை வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு, முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல், நம் நாட்டுடனான உறவு பாதிப்படைந்துஉள்ளது.
தடைவிதித்தது
அதை மேலும் சிக்கலாக்கும் வகையில், நம் நாட்டின் சில பொருட்களை இறக்குமதி செய்ய கடந்த மாதம் வங்கதேச அரசு தடை விதித்தது.
இதற்கு பதிலடி தரும் வகையில், வங்கதேசத்தில் இருந்து தரை வழியாக சில பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக துறையின் கீழ் செயல்படும், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
நம் நாட்டில் உள்ள எந்தவொரு நில சுங்கச் சாவடிகள் வழியாகவும், வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதி கிடையாது. இது தவிர பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பருத்தி, பிளாஸ்டிக், மரச்சாமான்கள் ஆகியவற்றின் தரைவழி இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பை ஏற்படுத்தும்
மீன், சமையல் எண்ணெய், ஜல்லிக் கற்கள் போன்ற பொருட்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட பொருட்கள் இனி, நவி மும்பையில் உள்ள நவஷோவா துறைமுகம் மற்றும் கொல்கட்டா துறைமுகம் வாயிலாக மட்டுமே இறக்குமதி செய்ய முடியும்.
அதேசமயம், நம் நாட்டின் வழியாக நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ள-து.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நில சுங்க சோதனை சாவடிகள் வாயிலாக ஆயத்த ஆடைகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாடு, வங்கதேச ஏற்றுமதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.