மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய 'ஏர் இந்தியா'வுக்கு மத்திய அரசு உத்தரவு
மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய 'ஏர் இந்தியா'வுக்கு மத்திய அரசு உத்தரவு
ADDED : ஜூன் 22, 2025 01:40 AM

புதுடில்லி: பணியில் அலட்சியமாக இருந்த மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கும்படி, 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம், டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் முறையிட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு பின், பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட மூன்று அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டுஉள்ளது.
விதிமீறல்
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
விமானக் குழுவினரின் பணி நேரங்களை திட்டமிடுதல், உரிமங்களில் உள்ள குறைபாடுகளை கருத்தில் கொள்ளாமல் செயல்படுதல், ஓய்வு அளித்தல் மற்றும் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் கடுமையான விதிமீறல்கள் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கவலை தெரிவித்தது.
இதையடுத்து, இயக்குநரகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், அலட்சியமாக செயல்படுதல், பணியில் கவனம் இல்லாதது போன்ற நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விதிமீறல்களுக்கு காரணமான, தங்களது பொறுப்பை சரியாக செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக, ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரிய வந்தது.
அவ்வாறு அலட்சியமாக செயல்பட்ட மண்டல துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது. அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் ஏர் இந்தியா நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், விமானம் இயக்குவதற்கான உரிமத்தை இடைநீக்கம் செய்வது, செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிருப்தி
இந்த உத்தரவு உடனடியாக செயல்படுத்தப்பட்டதாக, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில், பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கைக்கு டி.ஜி.சி.ஏ., உத்தரவிட்டு இருப்பது, அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

