கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க மத்திய அரசு திட்டம்
ADDED : அக் 31, 2025 04:42 AM
புதுடில்லி:  ரஷ்யாவின் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருப்பதால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு கருதி கச்சா எண்ணெய் கொள்முதலை பரவலாக்க திட்டமிட்டு வருவதாக, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
நம் நாட்டின் தினசரி கச்சா எண்ணெய் தேவையின், 85 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறோம். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியதில் இருந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின.
இதன் காரணமாக, அந்நாட்டின் கச்சா எண்ணெயின் தேவை குறைந்து விலை மலிவானது. அதையும் தள்ளுபடி விலையில் நாம் வாங்கி பயனடைந்து வந்தோம்.
இந்நிலையில், ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காததால், அந்நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களான, 'ரோஸ்னெப்ட்' மற்றும் 'லுாகாயில்' மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் நம் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை வழங்கவில்லை.
இது குறித்து நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று அளித்த பேட்டி:
ரஷ்ய கச்சா எண்ணெய் நிறுவனங்களான, 'லுாகாயில்' மற்றும் 'ரோஸ்னெப்ட்' மீது சமீபத்தில் அமெரிக்கா புதிய தடையை விதித்தது. இதன் விளைவுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் முடிவுகள், உலக சந்தையின் மாறும் சூழ்நிலை மற்றும் தேவைகளைக் கருத்தில் வைத்து எடுக்கப்படும்.
நாட்டிலுள்ள, 140 கோடி மக்களின் எரிசக்தி தேவையை  பூர்த்தி செய்ய, மலிவு விலையில், நம்பகமான எரிசக்தியைப் பெறுவது முக்கிய இலக்கு. இதற்காக கொள்முதலை பரவலாக்கும் திட்டத்தில் உள்ளோம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சு  நடந்து வருகிறது. ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

