தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு
தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு முதலீடு
ADDED : ஏப் 14, 2025 03:51 AM

புதுடில்லி : நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மறுசீரமைக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாலைகளை அமெரிக்க சாலைகளுக்கு இணையாக மேம்படுத்தவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:
கடினமான நிலப்பரப்பு மற்றும் எல்லைக்கு அருகில் உள்ள வடகிழக்கு மாநிலங்களின் சாலை கட்டமைப்பை அதிகரிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலங்களில், 3,73,484 கோடி ரூபாய் மதிப்பில், 21,355 கி.மீ.,க்கு, 784 நெடுஞ்சாலை திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவை இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளன.
நம் நாட்டின் உட்கட்டமைப்புகளை உலகத்தரத்திற்கு இணையாக மாற்றுவதே அரசின் நோக்கம். அதற்கான சாலைகள் அமைக்கும் பணி தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி அசாமில், 57,696 கோடி ரூபாய் மதிப்பிலும்; பீஹார் - 90,000 கோடி ரூபாய்; மேற்கு வங்கம் - 42,000 கோடி ரூபாய்; ஜார்க்கண்ட் - 53,000 கோடி ரூபாய்; ஒடிஷாவில் 58,000 கோடி ரூபாய் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
வடகிழக்கில், அசாமை தவிர மாற்ற மாநிலங்களில் 1,00,000 கோடி ரூபாய்க்கான சாலை பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த, 2014 மார்ச்சில், 91,287 கி.மீ.,யாக இருந்த நம் தேசிய நெடுஞ்சாலைகள், தற்போது, 1,46,204 கி.மீ.,யாக விரிவடைந்துள்ளன.
கடந்த, 2024 - 25ல் 5,150 கி.மீ., துாரத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5,614 கி.மீ., துார நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கி உள்ளது.
நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை வலுப்படுத்த அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எல்லைப்பகுதி சாலைகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், வடகிழக்கு சாலைகள் அமெரிக்க சாலைகளுக்கு இணையான தரத்திற்கு உருமாறும். இவ்வாறு அவர் கூறினார்.