ADDED : டிச 24, 2024 01:29 AM

புதுடில்லி: மொத்த சந்தையில், பருப்பு வகைகளின் விலை குறைந்துள்ள நிலையில், சில்லரை விற்பனை விலையை குறைக்கும்படி, சில்லரை வியாபாரிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
துவரம் பருப்பு, உளுந்து, கடலை பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை, மொத்த சந்தையில், 5 - 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனாலும், சில்லரை விற்பனை விலை குறையவில்லை.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பருப்பு வகைகளின் விளைச்சல் இந்தாண்டு மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேவையான அளவுக்கு இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த விலை கடந்த சில மாதங்களில், 5 - 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதே நேரத்தில், சில்லரை விலை குறைய வில்லை. இது தொடர்பாக, சில்லரை விற்பனை தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. உடனடியாக சில்லரை விற்பனை விலையை குறைக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு குறையாவிட்டால், குறைந்த விலையிலான, 'பாரத்' பிராண்டு பருப்பு வகைகளின் விற்பனையை மத்திய அரசு அதிகரிக்கும் என, கூறப்பட்டுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களில் பருப்பு வகைகளின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.