ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தல்
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தல்
ADDED : ஜன 17, 2025 11:56 PM

புதுடில்லி: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் இணைந்து பணியாற்றிய 16 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளதை, நம் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
அவர்களை தேடி கண்டுபிடித்து திருப்பி அனுப்பும்படி, ரஷ்யாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
குற்றச்சாட்டு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் வசிக்கும் வெளிநாட்டினரை அந்நாட்டு ராணுவம், உக்ரைனுக்கு எதிரான போரில் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதுவரை ரஷ்ய ராணுவத்தில், 126 இந்திய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
உக்ரைனுக்கு எதிரான போரில், இதுவரை 126 இந்தியர்களை ரஷ்ய ராணுவம் ஈடுபடுத்திஉள்ளது.
எனினும், மத்திய அரசின் தலையீட்டுக்கு பின் அதில், 96 இந்தியர்களை நம் நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.
அத்துடன், போரில் இதுவரை 12 இந்தியர்கள் கொல்லப்பட்டதை ரஷ்ய ராணுவம் உறுதி செய்து உள்ளது. இதேபோல், அந்நாட்டு ராணுவத்தில் 18 இந்தியர்கள் பணியாற்றி வரும் சூழலில், 16 பேர் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது.
வலியுறுத்தல்
எனவே, அவர்களின் நிலையை கண்டறிந்து, அனைவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் வடக்கஞ்சேரியைச் சேர்ந்த பினில், 32, என்ற இளைஞரை, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவம் வலுக்கட்டாயமாக பங்கேற்க செய்ததாக தகவல் வெளியான நிலையில், ட்ரோன் தாக்குதலில், அவர் பலியானார்.