ADDED : ஏப் 17, 2025 01:23 AM
மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து மத்திய ரயில்வே மண்டலம் இயங்குகிறது. இதன் சார்பில் ரயில் பயணியருக்காக, ஏ.டி.எம்., சேவையை ஓடும் ரயிலில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
இதற்காக பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலை தேர்வு செய்துள்ளனர். இந்த ரயில், மஹாராஷ்டிராவின் மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து புறப்பட்டு, நாசிக் அருகே உள்ள மனமாத் சந்திப்புக்கு தினசரி செல்கிறது.
இதன் ஏ.சி., பெட்டியின் கடைசியில், உணவு தயாரிக்கும் சிறிய பிரிவு இருந்தது. அந்த இடத்தை மாற்றிவிட்டு அதில் சோதனை முயற்சியாக ஏ.டி.எம்., இயந்திரத்தை நிறுவியுள்ளனர்.
இதை, தனியார் வங்கி வழங்கியுள்ளது. ரயில் வேகமாக செல்லும் போது இயந்திரம் அசையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த சேவை பயணியருக்கு கிடைக்க உள்ளது.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த வசதி மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.