வரம்பை மீறும் குரோக் ஏஐ: எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு
வரம்பை மீறும் குரோக் ஏஐ: எக்ஸ் தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு
UPDATED : ஜன 02, 2026 10:39 PM
ADDED : ஜன 02, 2026 10:23 PM

புதுடில்லி: குரோக் ஏஐ மூலம் ஆட்சேபனைக்குரிய வகையிலும், ஆபாசமாகவும் படங்கள் உருவாக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து , அதனை உருவாக்கிய எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதில் உடனுக்கு உடன் கேட்ட தகவல்களை வழங்கி வருவதால் இதில் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டதுவங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி உருவாக்கப்படும் படங்கள், வீடியோக்கள் அனைத்தும் அசல் எது, போலி எது என அதனை பார்ப்பவர்கள் குழம்பும் வகையில் உள்ளது.
கூகுளின் ஜெமினி ஏஐ, சாட் ஜிபிடி, மெட்டா ஏஐ என பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் பிரபலமாக உள்ளன. இதற்கு போட்டியாக எலான் மஸ்க் நடத்தி வரும் எக்ஸ் தளம், ' குரோக்' என்ற செயற்கை ஏஐ தளத்தை அறிமுகம் செய்துள்ளது.குரோக் ஏஐ மூலம் பெண்களை மையப்படுத்தி அவர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும்,நாகரீகமின்றியும் படங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து மத்திய அரசுக்கும் புகார்கள் சென்றன.இதனையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது.
இது குறித்து 2000 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்பச்சட்டம் மற்றும் 2021ம் ஆண்டின் ஐடிவிதிகள் ஆகியவற்றின் கீழ், எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பயனர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் வகையில் செயற்கையாக படங்கள் மற்றும் வீடியோக்களை பயனர்கள் குரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய செயல்கள் பாலியல் துன்புறுத்தலை இயல்பாக்குகின்றன. மற்றும் சட்டப் பாதுகாப்புகளை குறை மதிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. சட்டவிரோத உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை தடுக்க தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
மீறுபவர்களின் கணக்குகளை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மோசமாக சித்தரிக்கப்பட்ட படங்களை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன், இதனை மீறினால், போக்சோ, பெண்களுக்கு எதிரான சட்டப்பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

