4 வயது மகனை கொன்று உடலுடன் தப்பிய ‛பாசக்கார தாய்' பெங்களூருவில் கைது
4 வயது மகனை கொன்று உடலுடன் தப்பிய ‛பாசக்கார தாய்' பெங்களூருவில் கைது
ADDED : ஜன 09, 2024 01:33 PM

பெங்களூரு: கோவாவில், 4 வயது மகனை கொலை செய்த தாய், உடலுடன் காரில் தப்பினார். கோவா போலீஸ் சாமர்த்தியமாக செயல்பட்டதால், அந்த பெண், பெங்களூருவில் சிக்கினார்.
கர்நாடகாவில் செயல்படும் மைண்ட்புல் ஏஐ லேப் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசானா சேத்(39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவரும் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார்.
கோவாவுக்கு தனது மகனுடன் கடந்த சனிக்கிழமை( ஜன.,06) சென்றிருந்த சுசானா சேத், ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். பிறகு நேற்று அவர் மட்டும் பெங்களூருவுக்கு காரில் கிளம்பினார். வரும் போது மகனுடன் வந்த சுசானா சேத், செல்லும் போது தனியாக செல்வது ஓட்டல் ஊழியருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது ரத்தக்கறை இருந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார், கார் டிரைவரை மொபைல்போனில், அழைத்து சுசானா சேத்திடம் விசாரித்தனர். அதற்கு அவர், தனது மகன் நண்பருடன் சென்றுள்ளதாக கூறி முகவரி ஒன்றை அளித்துள்ளார். அந்த முகவரி போலி என்பது விசாரணையில் தெரிந்தது.
இதனையடுத்து அந்த டிரைவரை மீண்டும் தொடர்பு கொண்ட கோவா போலீசார் , சுசானா சேத்திற்கு சந்தேகம் வராத வகையில் கொங்கணி மொழியில் பேசி, காரை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு திருப்பும்படி தெரிவித்துள்ளனர். அதன்படி, டிரைவரும், கர்நாடகாவின் சித்ரதுர்கா போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றார்.
அதற்குள், கோவா போலீசாரும், சித்ரதுர்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கர்நாடக போலீசாரும் சுசானா சேத்தை சோதனை செய்தனர். அதில், மகன் கொலை செய்யப்பட்டு உடல் பையில் வைத்து கொண்டு வந்தது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோவா போலீசார், அங்கு வந்து சுசானா சேத்தை தங்களது கஸ்டடியில் எடுத்து அழைத்து சென்றனர். கொலைக்கான காரணம் தெரியாவிட்டாலும், கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.