மேற்காசியாவில் போர் நிறுத்தமே உடனடி தீர்வு;: ஜெய்சங்கர் பேச்சு
மேற்காசியாவில் போர் நிறுத்தமே உடனடி தீர்வு;: ஜெய்சங்கர் பேச்சு
ADDED : நவ 26, 2024 01:56 AM

ரோம்: “மேற்காசியாவில் நடக்கும் போர், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இஸ்ரேல் - பாலஸ்தீனம் என, இரு நாடுகளாக இருப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடான இத்தாலிக்குச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜி - 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
இதைத் தவிர, பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். ரோமில் நேற்று நடந்த மத்திய தரைக்கடல் அமைப்பின், 10வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது:
எந்த ஒரு பிரச்னைக்கும் பேச்சு வாயிலாகவே தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை. தற்போதைய யுகம் போருக்கானது அல்ல என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சை, போராக மாறும்போது, அது உலகளவில் வினியோக சங்கிலியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
போரின்போது, அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பலியாவதை ஏற்க முடியாது. மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அங்கு இஸ்ரேல், பாலஸ்தீனம் என, இரு நாடுகளாக இருப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதுபோலவே, ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான போர் தொடர்ந்து நீடிப்பது, நீண்ட கால பிரச்னைகளை உருவாக்கிவிடும். போரை நிறுத்தி, சுமுகமான முறையில் பேச்சு நடத்தி தீர்வு காண்பதையே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.