ADDED : ஜன 21, 2025 07:22 AM

சாம்ராஜ் நகர் மாவட்டம், சாம்ராஜ் நகரின் கலிபுராவில் உள்ளது சாமராஜேஸ்வரா கோவில். திராவிட கட்டட கலையின் அற்புதமான சித்திரமாகும்.
புராணங்கள்படி, இக்கோவில் 10ம் நுாற்றாண்டி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இக்கோவில், 'அரிகோடரா' என்று அழைக்கப்பட்டது. அரி என்றால் எதிரி மற்றும் கோடரா என்றால் கோடன்ரி என்பதாகும்.
சிருங்கேரி
மைசூரு மன்னர் குடும்பத்தில் 1776ல் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திர உடையார் பிறந்தார். அன்று முதல் இப்பகுதி சாமராஜ் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. தன் தந்தை ஜெயசாமராஜேந்திர உடையார் நினைவாக,1826ல் இக்கோவிலை மறைந்த மும்முடி கிருஷ்ணராஜ உடையார் கட்டினார்.
கருவறையில் சிவன் அருள்பாலிக்கிறார். இந்த சிவலிங்கம் சிருங்கேரியில் செதுக்கப்பட்டு, ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஆசியுடன், அப்போது மடாதிபதியாக இருந்தவரால், இங்கு நிறுவப்பட்டது.
அவரே, இக்கோவிலுக்கு சாமராஜேஸ்வரா லிங்கம் என்று பெயர் சூட்டினார். அத்துடன் மும்முடி கிருஷ்ணராஜ உடையார், தனது தாயாரின் நினைவாக, லிங்கத்தின் இடதுபுறத்தில் கெம்பனாம்ஜம்பா தேவி சிலையை நிறுவினார்.
ராஜகோபுரம்
கோவில் நுழைவு வாயிலில், 80 அடி உயர ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தின் உச்சியில் ஐந்து கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோபுரத்தில், கடவுள் உட்பட 64 வகையான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் நுழைவு வாயிலில் இடது புறம் விநாயகரும்; வலது புறம் சாமுண்டீஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோவிலில் முக மண்டபம் - திறந்தவெளி துாண்கள் அரங்கம், நந்தி மண்டபம் என இரு மண்டபங்கள் உள்ளன.
மும்முடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில் அவரது மனைவி, சிவனுக்கு தங்க ஆபரணங்களை அர்ப்பணித்தார்.
கோவிலை நிர்வகிக்க, 13 கிராமங்களில் இருந்து வசூலிக்கப்படும் வரியை பயன்படுத்த உத்தரவிட்டார்.
அமாவாசை அல்லது பவுர்ணமி என்று இங்குள்ள நவகிரஹங்களை தரிசிக்க பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவில் சுவர்களில் கிரிஜா கல்யாணம் உட்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூலையில் வரும் கன்னட ஆடி மாதத்தின் போது 'ரத உற்சவம்' விமர்சையாக நடக்கும். இந்த தேர், 180 ஆண்டுகள் பழமையானது.
தேரில் செதுக்கப்பட்ட சிலைகளை பார்க்கும் போது, கலை மீது மன்னர் வைத்திருந்த முக்கியத்துவம் தெரியும்.
அத்துடன், புதிதாக திருமணமான தம்பதி, இத்தேரின் மீது வாழைப்பழத்தை வீசினால், அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ரத உற்சவம், 1836 முதல் நடந்து வருகிறது. அன்று முதல் 2017 வரை ஓராண்டு கூட நிறுத்தாமல் ஆண்டுதோறும் ரத உற்சவம் நடத்தப்பட்டு வந்தது.
கடந்த, 2017ல் மர்ம நபர்கள், தேரின் ஒரு சக்கரத்துக்கு தீ வைத்து எரித்ததால், அபசகுணமாக கருதி, ரத உற்சவம் நடத்துவது நிறுத்தப்பட்டது.
ஆனாலும், உற்சவரை, பல்லக்கில் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து, ரத வீதியில் பவனி வந்தனர். ஆனாலும் பக்தர்கள் வருகை குறையாமல், ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அபிஷேகம்
தினமும் காலை 7:30 முதல் 11:30 மணி வரையும்; மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை கோவில் திறந்திருக்கும். காலை 7:30 முதல் 10:30 மணி வரை மற்றும் மாலை 6:00 மணிக்கு அபிஷேகங்கள் நடக்கும்.
- நமது நிருபர் -

