கடும் கண்காணிப்பில் 6 மாதம்; சம்பாய் சோரன் சோகக்கதை: பகீர் கிளப்பிய அசாம் முதல்வர்
கடும் கண்காணிப்பில் 6 மாதம்; சம்பாய் சோரன் சோகக்கதை: பகீர் கிளப்பிய அசாம் முதல்வர்
ADDED : ஆக 31, 2024 08:36 AM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் 6 மாதம் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார் என்ற பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா.
சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட தருணத்தில் அவருக்கு பதிலாக கட்சியின் முக்கிய தலைவரான சம்பாய் சோரன் முதல்வர் ஆக்கப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும், அவரே முதல்வராக அரியணை ஏற்றுக் கொண்டார்.
முதல்வர் பதவி பறிபோனதால் சம்பாய் சோரன் அதிருப்தி அடைந்தார். தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டினார். கட்சியில் எந்த மரியாதையும் இல்லாத நிலையில் அரசியலில் மாற்றுப் பாதையை நோக்கி பயணிக்க உள்ளதாக கூறிய சம்பாய் சோரன் நேற்று பா.ஜ.,வில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
ஜார்க்கண்ட் மாநில அரசியலில் இந்த இணைப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை விமர்சித்துள்ளார் அசாம் முதல்வரும், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தேர்தல் இணை பொறுப்பாளருமான ஹிமந்த பிஸ்வசர்மா.
இது குறித்து அவர் கூறி உள்ளதாவது; சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் போலீசாரால் 6 மாதங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட நிகழ்வை நான் எந்த முதல்வரிடத்திலும் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் ஹேமந்த் சோரனை நான் எச்சரிக்கிறேன். 2 மாதங்களில் அவருக்கு தகுந்த பதிலடி தருவோம். ஊழல் குற்றச்சாட்களில் சிக்கி இருக்கும் ஹேமந்த் சோரன் அரசு மூத்த அரசியல் தலைவரான சம்பாய் சோரனை இதுபோன்று நடத்தி இருக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.