சந்திரபாபு சொல்வது பொய்; தலையிடுங்க பிரதமரே: ஜெகன்மோகன் கடிதம்
சந்திரபாபு சொல்வது பொய்; தலையிடுங்க பிரதமரே: ஜெகன்மோகன் கடிதம்
ADDED : செப் 22, 2024 05:12 PM

விஜயவாடா: '' திருப்பதி லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு சொல்வது பொய். அவரின் குற்றச்சாட்டால் புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்,'' என ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மை, மரியாதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு கெடுத்த விவகாரத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடவுள் வெங்கடேஸ்வராவுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
சந்திரபாபு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிவு பெற்ற நிலையில், அரசின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தியில்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அனைத்து முனைகளிலும் புதிய அரசு தோல்வி அடைந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என அஞ்சி, இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை கூட மாநில அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை.
திருப்பதி தேவஸ்தானம் நடைமுறை குறித்து சந்திரபாபு பொய் பரப்பி வருகிறார். அங்கு லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக பொய் கூறுகிறார். உலகளவில் ஹிந்து பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படும் பொய் பிரசாரம் ஆகும். புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும்.
தனது குற்றச்சாட்டு பொய் என்பது அவருக்கு தெரியும். இருப்பினும், ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்று தெரிந்தும் அதனை சொல்லி வருகிறார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சுதந்திரமான அமைப்பு. மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பரிந்துரைப்படி உண்மையான பக்தர்கள் மட்டுமே இந்த அமைப்பு நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போாது பா.ஜ.,வுக்கு தொடர்புடையவர்களும் தேவஸ்தானத்தில் உள்ளனர். இக்கோயிலில் மாநில அரசின் பங்கு மிகக்குறைவு.
அரசியல் காரணங்களுக்காக சந்திரபாபு தெரிந்தே பொய் சொல்லி வருகிறார். அரசியல் நோக்கங்களுக்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கி பொய் சொல்வது சந்திரபாபுவுக்கு வழக்கம். இந்த விவகாரத்தில் அவரை கடுமையாக கண்டிப்பதுடன், அதில் உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.