குற்றங்களை தடுக்க ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணியுங்கள்! காவல்துறைக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
குற்றங்களை தடுக்க ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணியுங்கள்! காவல்துறைக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு
ADDED : டிச 04, 2024 11:59 AM

ஹைதராபாத்: குற்றங்களை தடுக்க, ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு காவல்துறைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்தி வருகிறார். அதை ஊக்குவிக்கும் விதமாக ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் அதன் உள்கட்டமைப்பு கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1000 கோடி ரூபாய் முதலீடுகளும், 3000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களின் வல்லுநர்கள் தங்கள் தயாரிப்புகளை பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதிகளில் ட்ரோன் கேமரா பயன்படுத்துவதால் என்ன பலன்கள் கிடைக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவரித்தனர்.
இந் நிகழ்வில் அவர்களின் கருத்துரைகளை கேட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலம் முழுவதும் ட்ரோன் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். அனைத்து அரசு துறைகளிலும் ட்ரோன்களை பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரோன்கள் மூலம் கிடைக்கும் பயன்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார்.