ADDED : நவ 21, 2024 09:23 PM
விக்ரம்நகர்:காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிப்பதை அடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பணி நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசின் அலுவலகங்கள் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை அல்லது காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை செயல்படலாம். அத்துடன் வாகன மாசுபாட்டை குறைக்க 'கார்பூலிங்' அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் அண்டை மாநிலங்களில் அறுவடை வயல்களை எரிப்பது குறையவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. செயற்கைக்கோள் வாயிலாக எடுத்த தரவுகளின்படி, நேற்று மட்டும் பஞ்சாபில் 192, ஹரியானாவில் 10, மற்றும் உத்தர பிரதேசத்தில் 165 அறுவடை வயல் எரிப்பு நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. இது புதன்கிழமை 395ஆக இருந்தது.
செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20ம் தேதி வரை, பஞ்சாபில் 10,296; ஹரியானாவில் 1,193; உத்தர பிரதேசத்தில் 3,868 எரிப்புகள் பதிவாகியுள்ளன.