உட்கட்சி பூசலால் திரிணமுல் தலைவர் மம்தா... மனமாற்றம்!'இண்டி' கூட்டத்துக்கு வலிய சென்று பங்கேற்கிறார்
உட்கட்சி பூசலால் திரிணமுல் தலைவர் மம்தா... மனமாற்றம்!'இண்டி' கூட்டத்துக்கு வலிய சென்று பங்கேற்கிறார்
UPDATED : ஜூன் 07, 2026 11:37 PM
ADDED : ஜூன் 07, 2026 11:31 PM

புதுடில்லி:திரிணமுல் காங்., கட்சியில், 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உட்கட்சி பூசல் பூதாகரமாகி இருக்கும் நிலையில், தேசிய அளவில் தன் செல்வாக்கை மீட்டெடுக்க, அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி டில்லியை நோக்கி தன் பார்வையை திருப்பியுள்ளார். ஒரு காலத்தில், 'இண்டி' கூட்டணியை சீண்டாமல் இருந்த அவர், தேர்தல் தோல்வி, கட்சிக்குள் அதிகார இழப்பு போன்ற காரணங்களால், இன்று நடக்கும் அந்த கூட்டணியின் கூட்டத்துக்கு தானே வலிய சென்று பங்கேற்கிறார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அக்கட்சியின், 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் சுவேந்து அதிகாரி முதல்வரானார். ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி, பா.ஜ.,வில் சேர்ந்து அவரை வீழ்த்தியது, திரிணமுல் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த தேர்தல் தோல்வி திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ.,க்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரிதபிரதா உள்ளிட்டோரை மம்தா பானர்ஜி நீக்கியது, உட்கட்சி பூசல் வெடிக்க காரணமாக அமைந்தது.
குறிப்பாக, மம்தாவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜி, கட்சி விவகாரத்தில் தலையிட்டு சர்வாதிகார போக்குடன் நடந்து வருவது, மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களிடையே மன கசப்பை உருவாக்கியது.
எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தில், போலி கையெழுத்து போட்ட விவகாரத்தில், அபிஷேக் பானர்ஜி மீது கட்சியினர் கடுங்கோபத்தில் உள்ளனர். இதனால், மொத்தம் உள்ள, 80 எம்.எல்.ஏ.,க்களில், 60 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரதா பானர்ஜி பக்கம் சாய்ந்து, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர். மேலும், லோக்சபாவில் உள்ள, 28 எம்.பி.,க்களில் பலர் கட்சியின் லோக்சபா தலைவர் பதவியில் இருந்து அபிஷேக் பானர்ஜியை நீக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், உட்கட்சி பூசலை சமாளிக்க கட்சியின் நிர்வாக அமைப்பில் சில அதிரடி மாற்றங்களை மம்தா மேற்கொண்டுள்ளார். அபிஷேக் பானர்ஜியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், ராஜ்யசபா எம்.பி.,க்களான டெரெக் ஓ பிரையன், டோலோ சென் ஆகியோரை இணை பொதுச்செயலராக நியமித்துள்ளார். அதிருப்தியில் உள்ள, 31 முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் மம்தா இறங்கி இருக்கிறார்.
இதற்கிடையே, மம்தா பானர்ஜிக்கு கட்சிக்குள் தலைமை ஆலோசகர் போன்ற பெயரளவு பதவி வழங்கி, விலக்கி வைக்க அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான ரிதபிரதா பானர்ஜி யோசனை தெரிவித்திருந்தார்.
இதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி ஒரு முடிவை எடுத்தால், எங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான குல்ஷன் முல்லிக் திட்டவட்டமாக கூறினார்.
''மம்தா தான் எங்களது தலைவர், வழிகாட்டி. பெயரளவு பதவி கொடுத்து, அவரை ஓரங்கட்டி வைக்க விடமாட்டோம்,'' என, அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ., சங்கீத் பசுனியாவும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.
உட்கட்சி பூசல், கருத்து வேறுபாடுகள், சர்வாதிகாரம் போன்ற விவகாரங்களால் திரிணமுல் காங்., தள்ளாடி வரும் சூழலில், கட்சிக்குள் தன் செல்வாக்கை மீட்டெடுக்கவும், தேசிய அரசியலில் தன் இருப்பை நிலைநிறுத்தவும், மம்தா பானர்ஜி டில்லி சென்றுள்ளார்.
இன்று நடக்கும் இண்டி கூட்டணி கூட்டத்தில் அவர் பங்கேற்று, தேசிய அரசியல் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் இண்டி கூட்டணியில் காங்., தலைமையை கடுமையாக விமர்சித்து, அதை சீண்டாமல் இருந்த மம்தா, தற்போது தன் அரசியல் வாழ்க்கைக்காக அந்த கூட்டணியின் கூட்டத்துக்கு தானே வலிய சென்று பங்கேற்க உள்ளார்.
இது குறித்து, மேற்கு வங்க காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காங்கிரசை மம்தா பானர்ஜி வாய்க்கு வந்தபடி விமர்சித்தார். தற்போது அவருக்கு கடுமையான காலம் என்பதால், இண்டி கூட்டணியில் சேர துடிக்கிறார். அவரை போல, காங்., விலகி ஓடாது. அதே சமயம், அவருக்கு நெருங்கிய நண்பராகவும் இருக்காது' என்றார்.
இண்டி கூட்டணி மம்தாவை காப்பாற்றுமா அல்லது கைவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
23 கட்சிகள் பங்கேற்பு! டில்லியில் இன்று நடக்கும், 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. சொந்த காரணங்களுக்காக சில கட்சிகளால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், மோடி அரசின் கொள்கைகள், எதிர்க்கட்சிகளை நசுக்கப் பார்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன. ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்
