கர்நாடக அரசியலில் மாற்றங்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆரூடம்
கர்நாடக அரசியலில் மாற்றங்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆரூடம்
ADDED : பிப் 03, 2024 11:12 PM

ஹூப்பள்ளி,: ''லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடக அரசியலில் மாபெரும் மாற்றங்கள் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் டெங்கினகாயி தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது:
நாங்கள் எதிர்க்கட்சியினராக, அரசின் குறைகளை சுட்டிக் காண்பிக்கிறோம். லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத்தில் மிக பெரிய அரசியல் மாற்றங்கள் நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.
மாவட்ட தலைவர்களின் தலைமையில், செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளில், வெற்றி பெற திட்டம் வகுக்கிறோம்.
பா.ஜ.,வில் எந்த முடிவுகள் எடுத்தாலும், நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவோம். நாட்டில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமாக்குவதே, எங்களின் நோக்கமாகும்.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டுக்கு தொண்டர்கள் செல்லக் கூடாது என, உத்தரவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.
சில நாட்களுக்கு முன்பு, அனைவரும் சேர்ந்து மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் ஊர்வலம் நடத்தினோம். தொண்டர்கள் அனைத்து தலைவர்களின் வீட்டுக்குச் செல்வது சகஜம். ஹூப்பள்ளி - தார்வாட் பகுதியில், பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது கட்சி மேலிடம். கர்நாடகாவுக்கு மட்டும், காங்கிரஸ் அநியாயம் செய்யவில்லை. அக்கட்சி உட்பட, அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களுக்கும் அநியாயம் செய்துள்ளது.
தொகுதி வளர்ச்சி நிதி வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. வாக்குறுதித் திட்டங்கள் விஷயத்தில், முதல்வர் கூற வேண்டியதை, எம்.எல்.ஏ., பால கிருஷ்ணா கூறியுள்ளார்.
வாக்குறுதித் திட்டங்கள் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என, காங்கிரசாரே கூறுகின்றனர். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.