கட்சி மாறுவது காங்., கலாசாரம் பஞ்சாப் முதல்வர் பாய்ச்சல்
கட்சி மாறுவது காங்., கலாசாரம் பஞ்சாப் முதல்வர் பாய்ச்சல்
ADDED : பிப் 11, 2025 08:06 PM
புதுடில்லி:பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுடன் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், நிருபர்களிடம் கூறியதாவது:
பஞ்சாபில் 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா கூறியுள்ளது பொய். கட்சி மாறுவது காங்கிரஸ் கலாசாரம். அதனால்தான் அடுத்த கட்சியைப் பற்றி பஜ்வா பேசுகிறார்.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியைக் கவனிப்பதில்லை. டில்லியில் மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பஞ்சாப் மாநில கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் மத்தியில் சென்று எங்கள் வியர்வை மற்றும் ரத்தத்தைச் சிந்தி இந்தக் கட்சியை உருவாக்கியுள்ளோம்.
டில்லி தேர்தலில் பஞ்சாப் எம்.எல்.ஏ.,க்களின் அயராத உழைப்புக்காக அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். எங்கள் பணியால் டில்லி மக்களின் அன்பைப் பெறுகிறோம். எதிர்காலத்திலும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
மற்ற மாநிலங்களை விட, பஞ்சாபில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதனால்தான் இங்கு தொழிற்சாலைகள் துவக்கப்படுகின்றன. மாநிலம் முழுதும் 17 சுங்கச் சாவடிகளை மூடியுள்ளோம். அதேபோல, எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்துள்ளோம்.
டில்லியைப் போலவே, பஞ்சாபிலும் மொஹல்லா கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் துவக்கப்படும். மக்கள் பணத்தை மக்களுக்காக மட்டுமே செலவு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

