ஸ்ரீதேவி மரணம் குறித்து போலி ஆவணம் சமர்ப்பித்த பெண் மீது குற்றப்பத்திரிகை
ஸ்ரீதேவி மரணம் குறித்து போலி ஆவணம் சமர்ப்பித்த பெண் மீது குற்றப்பத்திரிகை
ADDED : பிப் 05, 2024 04:59 AM

புதுடில்லி: நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து, தான் நடத்திய விசாரணைக்கு ஆதரவாக பிரதமர் கடிதம் அளித்ததாகக் கூறி போலி ஆவணம் சமர்ப்பித்த பெண் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் 2018 பிப்ரவரியில் மர்மமாக இறந்தார்.
இது தொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த தீப்தி பின்னிட்டி என்ற பெண், தான் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தினார்.
அப்போது, ஸ்ரீதேவியின் மரணத்தில் இரு நாட்டு அரசுகள் உண்மையை மறைப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தன் கருத்துக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பான போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மும்பை வழக்கறிஞர் சாந்தினி ஷாவின் புகாரின் அடிப்படையில், பிரதமர் அலுவலகம் பரிந்துரைப்படி சி.பி.ஐ., கடந்த ஆண்டு பின்னிட்டி மீது வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பின்னிட்டி சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை எனக்கூறி, தீப்தி பின்னிட்டி மீது சி.பி.ஐ., நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது குறித்து, பின்னிட்டி நேற்று கூறியதாவது:
என் வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் சி.பி.ஐ., என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

