ரயில்வே ஊழல் வழக்கில் லாலு, ரப்ரி, தேஜஸ்வி மீது குற்றச்சாட்டு பதிவு! தேர்தல் நெருங்கும் நேரத்தில் 'செக்' வைத்தது டில்லி நீதிமன்றம்
ரயில்வே ஊழல் வழக்கில் லாலு, ரப்ரி, தேஜஸ்வி மீது குற்றச்சாட்டு பதிவு! தேர்தல் நெருங்கும் நேரத்தில் 'செக்' வைத்தது டில்லி நீதிமன்றம்
UPDATED : அக் 13, 2025 11:55 PM
ADDED : அக் 13, 2025 11:47 PM

புதுடில்லி : பீஹார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல், கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ், டில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை நேற்று பதிவு செய்துள்ளது.
அதே போல் அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மீது கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 6 மற்றும் 11ல், இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. இந்நிலையில், ஆர்.ஜே.டி., எனும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிக்கு இந்த தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் வகையில், டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தார்.
அப்போது, ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் ஒடிசாவின் புரியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல்களை பராமரிக்கும் ஒப்பந்தம், முறைகேடான வழியில், 'சுஜாதா ஹோட்டல்' என்ற நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதாக சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.
இந்த ஒப்பந்தத்துக்கு பிரதிபலனாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், ரப்ரி தேவி மற்றும் தேஜஸ்வியின் நிறுவனத்திற்கு லஞ்சமாக கைமாறியதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
தன் பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்து, அதற்கு பிரதிபலனாக நிலங்களை லாலு வாங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில், அவரது குடும்பத்தினருக்கும் பங்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.
எனவே, லாலு மீது ஊழல், கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதேபோல், லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மீது சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தர விடுகிறோம்.
ஐ.ஆர்.சி.டி.சி., ஊழல் தொடர்பான இந்த வழக்கு, வரும் 27ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.