சோனியா மீது குற்றப்பத்திரிகை; பண மோசடி வழக்கில் அதிரடி
சோனியா மீது குற்றப்பத்திரிகை; பண மோசடி வழக்கில் அதிரடி
ADDED : ஏப் 16, 2025 04:19 AM

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை சொத்து பரிவர்த்தனையில் பண மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது.
யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர்.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.
விசாரணையில், 988 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான, 661 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
டில்லி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள இந்த மூன்று சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், அமலாக்கத் துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத் துறை சார்பில், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக சோனியா, இரண்டாவது குற்றவாளியாக ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதைத் தவிர, காங்கிரசின் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ராடோ உள்ளிட்டோரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த குற்றப்பத்திரிகையின் மீதான விசாரணை, வரும் 25ம் தேதி துவங்கும் என, சிறப்பு நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.
சோனியா, ராகுல் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. ஆனால், முதல்முறையாக சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது, அரசியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா மருமகனிடம் விசாரணை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா, தொழிலதிபராக உள்ளார்.
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது, நிலங்கள் வாங்கி, விற்றதில் பல மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இதில், ராபர்ட் வாத்ராவின் நிறுவனங்கள், குறைந்த விலைக்கு வாங்கி, சிறிது காலத்தில் அதிக விலைக்கு நிலங்களை விற்றதாக பல புகார்கள் உள்ளன.
இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பான வழக்கில், கடந்த 8ம் தேதி ஆஜராக வாத்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. வேறு தேதியில் ஆஜராவதாக அவர் கூறியிருந்தார். அதன்படி, இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது.
அதையேற்று, அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வாத்ரா நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு ஆஜராகும் முன், நிருபர்களிடம் பேசிய ராபர்ட் வாத்ரா, “இது அரசியல் பழிவாங்கும் செயல். நான் நாட்டின் நலன் குறித்தும், சிறுபான்மையினர் குறித்தும் பேசினால், உடனே எனக்கு சம்மன் அனுப்பி விடுகின்றனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,” என்றார்.