பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீர் நிறுத்தம்!: பாக்லிஹார் அணை ஷட்டர்கள் மூடல்
பாகிஸ்தானுக்கு செல்லும் செனாப் நதி நீர் நிறுத்தம்!: பாக்லிஹார் அணை ஷட்டர்கள் மூடல்
ADDED : மே 05, 2025 01:02 AM

புதுடில்லி: சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணையின் ஷட்டர்கள் மூடப்பட்டு, பாகிஸ்தானுக்கு நீர் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, நம் அண்டை நாடான பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உட்பட பல அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. அதில் ஒன்று, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது.
ஒப்பந்தம்
திபெத் மற்றும் இமய மலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் ஆறு நதிகள், சிந்து நதி தொகுப்பாக கூறப்படுகிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்கின்றன.
கடந்த, 1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது.
இமயமலை பகுதியில், ஹிமாச்சல் மாநிலத்தில் உருவாகும் செனாப் நதி, ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு பாய்கிறது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இங்கு, அணையின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டன.
பாதிப்பு
இதுபோல, ஜீலம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிஷண்கங்கா அணையின் ஷட்டர்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாக்லிஹார் அணையில் நீர் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.
'இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கான நீரை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும் என்பதை உணர்த்துவதாக அமையும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.