சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்
சென்னை - மைசூரு 'வந்தே பாரத்' 2வது ரயில் சேவை துவக்கம்
ADDED : மார் 12, 2024 11:59 PM

சென்னை : சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே, புதிய 'வந்தே பாரத்' ரயில் சேவையை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாடு முழுதும், 85,000 கோடி ரூபாய்க்கு மேலான, ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை -- மைசூரு இடையே, இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
சரக்குகளை கையாள சிங்கபெருமாள் கோவில் உட்பட ஆறு இடங்களில் புதிய ஷெட்டுகள், ரயில் பாராமரிப்பு பணிக்காக பேசின்பிரிட்ஜ் யார்டில் புதிய பிட்லைன், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரயில் நிலையங்களில் மலிவு விலை மருந்தகங்களின் சேவையும் துவங்கியது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழக கவர்னர் ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் பங்கேற்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், நம் நாடு வேகமாக வளர்ந்து உள்ளது. அனைத்து துறைகளிலும், உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரயில்கள், அனைத்து நகரங்களையும் இணைக்கும் விதமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி அதன் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உள்ளது.
பிரதமர் மோடி, உள்கட்டமைப்பு வசதிகளை வலிமையாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று மட்டும் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும், 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஒன்பது புதிய ரயில் சேவை கிடைத்துள்ளது. கடந்த 2009 - 2014ல், வெறும் 800 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது.
தமிழகத்துக்கு தேவையான நேரத்தில், அனைத்து ரயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வும் செயல்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

