சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்!
UPDATED : செப் 21, 2024 07:36 PM
ADDED : செப் 21, 2024 07:33 PM

புதுடில்லி: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்பட 7 மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்களுக்கு கடந்த ஜூலை மாதமே, நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில், கொலிஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், 8 ஐகோர்ட்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சல் ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமச்சந்திர ராவ், ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக டிஷி ரப்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டில்லி ஐகோர்ட் நீதிபதியாக இருந்த சுரேஷ்குமார் கைத், மத்திய பிரதேசத்தின் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி இந்திர பிரசன்ன முகர்ஜி மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.