பொறுப்பை தட்டி கழிக்கிறது மாநில அரசு: ஐகோர்ட் காட்டம்
பொறுப்பை தட்டி கழிக்கிறது மாநில அரசு: ஐகோர்ட் காட்டம்
ADDED : நவ 21, 2025 04:30 AM

சென்னை: 'முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பம், மாநில அரசின் பரிசீலனையில் உள்ள போது, கைதிகளுக்கு இடைக்கால ஜாமின் வழங்க முடியாது' என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 'முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பங்கள் மீது, மூன்று மாதங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட கைதிகள், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, அரசுக்கு அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கைதிகளின் உறவினர்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை இந்த மனுக்கள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கும் வரை, தங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்.
'பல வழக்குகளில், இந்த நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. அவை, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு உள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், 'முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம், அரசின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதால், இடைக்கால ஜாமின் வழங்க ஆட்சேபம் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், 'தண்டனை இடைநிறுத்த விதிகளின்படி மட்டுமே, கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதற்கு உரிமை உண்டு.
'அரசால் மட்டுமே விலக்கு அளிக்க முடியும். விலக்கு அளிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாமல், 'ஆட்சேபம் இல்லை' எனக்கூறி, இடைக்கால ஜாமின் வழங்க, நீதிமன்ற பணிச் சுமையை அதிகரிப்பது சட்டப்படி சரியானதல்ல' என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உத்தரவு மாநில அரசு, தன் அதிகாரத்தை செயல்படுத்தாமல், பொறுப்பை தட்டிக் கழிக்கிறது. முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பங்கள், அரசிடம் பரிசீலனையில் இருப்பதற்காக, இடைக்கால ஜாமின் வழங்க முடியாது.
எனவே, மனுதாரர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பங்கள் மீது, தமிழக அரசு மூன்று மாதங்களில் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய விண்ணப்பம் நிலுவையில் உள்ள போது, இடைக்கால ஜாமின் கோரியோ, விடுப்பு கோரியோ, இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரியோ தாக்கல் செய்யப்படும் மனுக்களை, உயர் நீதிமன்ற பதிவுத்துறை பட்டியலிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

